துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் - உறங்கினார் செத்தாரின் வேறாதல் உடையரேனும், அக்காலத்து அறிவின்மையான் வேறு எனப்படார்; கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பார் - அவ்வாறே கள்ளுண்பார் நஞ்சுண்பாரின் வேறாதல் உடையரேனும், எக்காலத்தும் அறிவின்மையான் வேறு எனப்படார், அவர்தாமே யாவர். (உறங்கினார்க்கும் கள் உண்பார்க்கும் வேற்றுமை உயிர்ப்பு நிற்றல். வேறாதலும் வேறன்மையும் உடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை நிரல்நிரை யாக்கி, 'திரிக்கப்படுதலான் உறங்கினாரும் நஞ்சுண்பாரும் ஒப்பர்; கைவிடப்படுதலான் செத்தாரும் கள்உண்பாரும் ஒப்பர்' என்று உரைப்பாரும் உளர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்ந்து ஈண்டுக்கூறல் பயனின்றாகலானும், சொற்கிடக்கை நிரல் நிரைக்கு ஏலாமையானும், அஃது உரையன்மை அறிக. இவை இரண்டு பாட்டானும் அவரது அறிவிழத்தற் குற்றம் கூறப்பட்டது.) உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ஒற்றிக் கண்சாய் பவர். 927 கள் ஒற்றிக் கண் சாய்பவர் - கள்ளை மறைந்துண்டு அக்களிப்பால் தம் அறிவு தளர்வார்; உள்ளூர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் - உள்ளூர் வாழ்பவரான் உள் நிகழ்கின்றது உய்த்துணர்ந்து எஞ்ஞான்றும் நகுதல் செய்யப்படுவர். (உள்ளூர் - ஆகுபெயர், 'உண்டு' என்பது அவாய் நிலையான் வந்தது. உய்த்துணர்தல் - தளர்ச்சியால் களிப்பினை உணர்ந்து அதனால் கள்ளுண்டது உணர்தல்.)களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉம் ஆங்கே மிகும். 928 களித்து அறியேன் என்பது கைவிடுக - மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியேன் என்று உண்ணாத பொழுது தம் ஒழுக்கங் கூறுதலையொழிக; நெஞ்சத்து ஒளித்ததும் ஆங்கே மிகும் - அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும் முன்னையளவில் மிக்கு வெளிப்படுதலான். ('களித்தறியேன்' எனக் காரணத்தைக் காரியத்தாற் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.)
|