பக்கம் எண் :

378

இயற்றுவான் வகை நான்காவன: ஆதுரன்மாட்டு அன்புடைமை, மனமொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவை. இவையெல்லாம் கூடியவழியல்லது பிணி தீராமையின் இத்தொகுதியையும் 'மருந்து' என்றார், ஆயுள்வேதமுடையாரும் இவை கால்களாக நடக்கும்என்பது பற்றி 'பாதம்' என்றும், இவை மாறுபட்டவழிச் சாத்தியமும் முதிர்ந்து அசாத்தியமாம் என்றும் கூறினார். இதனான், அதனைத் தீர்த்தற்கு வேண்டுவன எல்லாம் தொகுத்துக்கூறப்பட்டன.)

அங்கவியல் முற்றும்.

ஒழிபியல்


இனி, அவ்வரசியலினும் அங்கவியலினும் அடங்காது ஒழிந்தவற்றது இயல்பு பதின்மூன்று அதிகாரத்தால் கூறுவான் தொடங்கி, முதற்கண் குடிமை கூறுகின்றார்.

அதிகாரம் 96. குடிமை

[ அஃதாவது , உயர்ந்த குடியின்கண் பிறந்தாரது தன்மை . உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாதாகலின் , அச்சிறப்புப்பற்றி இது முன் வைக்கப் பட்டது.]

இற்பிறந்தார் கண்அல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.

951
செப்பமும் நாணும் ஒருங்கு - செம்மையும் நாணும் சேர; இற்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை - குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா. (இல், குடி, என்பன ஈண்டு உயர்ந்தவற்றின் மேல, செம்மை - கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாமை. நாண் - பழிபாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உளவாம், பிறர்க்காயின் கற்பித்த வழியும் நெடிது நில்லா என்பதாம்.)