பக்கம் எண் :

379
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
952
குடிப்பிறந்தார் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார்; ஒழுக்கமும் வாய்மையும நாணும் இம்மூன்றும் இழுக்கார் - தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும், கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார். (ஒழுக்கம் முதலியன மெய்ம்மொழி மனங்களினவாகலின், அம் முறையவாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின் 'இழுக்கார்' என்றார்.)

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு.

953
வாய்மைக்குடிக்கு - எக்காலத்தும் திரிபில்லாத குடியின்கண் பிறந்தார்க்கு; நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப - வறியார் சென்ற வழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையும் ஆகிய இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் நூலோர். (பொய்ம்மை திரிபு உடைமையின் திரிபின்மையை 'வாய்மை' என்றும். 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' ஆகலின், இகழாமையை அவர் கூறாக்கியும் கூறினார். 'குடி' ஆகுபெயர். 'நான்கின்வகை' என்பது பாடமாயின், வாய்மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கால் உளதாம் என்று உரைக்க. இவை மூன்று பாட்டானும் குடிப்பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது.)

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.

954
அடுக்கிய கோடி பெறினும் - பலவாக அடுக்கிய கோடி அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்; குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யார். ('அடுக்கிய கோடி' என்பது, ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. குன்றும் தொழில்கள் - குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.)