(புகழ் பயப்பதனைப் 'புகழ்' என்றார். பயனாய இவ்விரண்டும் இன்றிக் கொன்னே மானம் கெடுகின்றது என்னை என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவை செய்தற் குற்றம் கூறப்பட்டது.) ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று.967 ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் - தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின்; அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று - அது செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று. (ஒட்டுதல் - பொருந்துதல். 'அந்நிலையே' என்றது, செல்லாத முன்னை நிலைக்கண்ணே நின்று என்றவாறு, அப்பொழுதே என்றும் ஆம். 'புகழும் புத்தேள் நாடும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வாம்' என்பாரை நோக்கிக் கூறியது.)மருந்தோமற் றூன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து. 968 பெருந்தகைமை பீடு அழிய வந்த இடத்து - உயர்குடிப் பிறப்புத் தன்வலியாகிய மானம் அழியவந்துழி; ஊன் ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ - இறத்தலொழிந்து பயனில்லாத உடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னும் இறவாமைக்கு மருந்தாமோ? ('மற்று' என்பது மேற்சொல்லிய இறப்பினை மாற்றி நின்றது. நற்குணங்கட்கு எல்லாம் இடனாதல் சிறப்புப்பற்றி, 'பெருந்தகைமை' என்றும், அவை எல்லாவற்றுள்ளும் அதற்கு வலியாதற் சிறப்புப்பற்றி, 'பீடு' என்றும், அஃது அழிந்தால் நின்ற வெற்றுடம்பு இழிக்கப்படுதலின், அதனை 'ஊன்' என்றும், பின்னால் இறத்தல் ஒருதலை என்பார் 'மருந்தோ' என்றும் கூறினார். மானத்தின் தொழில் அதற்கு இடனாகிய குடிப்பிறப்பின்மேல் நின்றது.)மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். 969 மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்; மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத்தான் மானம் எய்தும் எல்லை வரின், அதனைத் தாங்காது இறப்பர்.
|