பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்; சிறுமை குற்றமே கூறிவிடும் - மற்றைச் சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவார். (மறைத்தலும் கூறலும் ஏனையிடத்தும் இயைந்தன. அற்றம் - ஆகுபெயர். தான் என்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.) அதிகாரம் 99. சான்றாண்மை[ அஃதாவது , பல குணங்களானும் நிறைந்து அவற்றை ஆள்தல் தன்மை. ' பல குணங்களானும் ' என்பது , சாலுதல் தொழிலால் பெறப்படுதலின் ' அவற்றை ' என்பது , வருவிக்கப்பட்டது . பெருமையுள் அடங்காத குணங்கள் பலவற்றையும் தொகுத்துக் கொண்டு நிற்றலின் , இஃது அதன் பின் வைக்கப்பட்டது.]
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. 981 கடன் அறிந்து சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு - நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு; நல்லவை எல்லாம் கடன் என்ப - நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர். (சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன செய்துகொண்டனவாய வழியும் சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர் பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு கூறுவர் என்பதாம்.)குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத் துள்ளதூஉம் அன்று. 982 சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே; பிற நலம் எந்நலத்தும் உள்ளது அன்று - அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று. (அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப் புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப் பிறப்பும் கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின்,
|