பக்கம் எண் :

390

எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். இவைஇரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள்பொதுவகையான் கூறப்பட்டன.)

அன்புநாண் ஓப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண்.
983
அன்பு - சுற்றத்தார் மேலேயன்றிப் பிறர்மேலும் உளதாய அன்பும்; நாண் - பழி பாவங்களின் நாணலும்; ஒப்புரவு-யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும்; கண்ணோட்டம் - பழையார்மேல் கண்ணோடலும்; வாய்மையொடு- எவ்விடத்தும் மெய்ம்மை கூறலும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சால்பு என்னும் பாரத்தைத் தாங்கிய தூண்கள் ஐந்து. (எண் 'ஒடு' முன்னவற்றோடும் கூடிற்று. இக்குணங்கள் இல்வழிச் சால்பு நிலைபெறாமையின், இவற்றைத் 'தூண்' என்றார். ஏகதேச உருவகம்.)

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

984
நோன்மை கொல்லா நலத்தது - பிற அறங்களும் வேண்டுமாயினும், தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணதாம்; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது - அது போலப் பிற குணங்களும் வேண்டுமாயினும் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம். (நலம் என்னும் ஆகுபெயர்ப் பொருள் இரண்டனையும், தலைமை தோன்ற, இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லா வரம் சிறந்தாற்போலச் சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாக் குணம் சிறந்தது என்பதாம்.)

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

985
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் - ஒரு கருமத்தைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது, அதற்குத் துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக் கொள்ளுதல்; சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது - இனிச் சால்புடையார் தம் பகைவரைப் பகைமையொழிக்கும் கருவியும் அதுவே.