ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக் காழி எனப்படு வார்.989 சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் - சால்புடைமையாகிய கடற்குக் கரை என்று சொல்லப்படுவார்; ஊழி பெயரினும் தாம் பெயரார் - ஏனைக்கடலும் கரையுள் நில்லாமற் காலந்திரிந்தாலும் தாம் திரியார். (சான்றாண்மையது பெருமை தோன்ற அதனைக் கடலாக்கியும், அதனைத் தாங்கிக் கொண்டு நிற்றலின் அஃதுடையாரைக் கரையாக்கியும் கூறினார். 'பெருங்கடற்கு ஆழி யனையன் மாதோ'(புறநா.330) என்றார் பிறரும். ஏகதேச உருவகம்.)சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான் தாங்காது மன்னோ பொறை. 990 சான்றவர் சான்றாண்மை குன்றின் - பல குணங்களானும் நிறைந்தவர் தம் தன்மை குன்றுவராயின்; இரு நிலந்தான் பொறை தாங்காது - மற்றை இரு நிலந்தானும் தன் பொறையைத் தாங்காதாய் முடியும். ('தானும்' என்னும் எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. அவர்க்கு அது குன்றாமையும் அதற்கு அது தாங்கலும் இயல்பாகலான் அவை எஞ்ஞான்றும் உளவாகா என்பது தோன்ற நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் அசை. இதற்கு 'இரு நிலம் பொறை தாங்குவது சான்றவர் துணையாக வருதலான் அதுவும் அது தாங்கலாற்றாது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவற்றான் நிறைந்தவரது சிறப்புக் கூறப்பட்டது.) அதிகாரம் 100. பண்பு உடைமை[ அஃதாவது , பெருமை சான்றாண்மைகளில் தாம் வழுவாது நின்றே எல்லார் இயல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதல் ;' பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல் ' (கலித் . நெய்தல் . 16) என்றார் பிறரும் . அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும் .]
|