பக்கம் எண் :

416
கரப்பிலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்
றிரப்பும்ஓர் ஏஎர் உடைத்து.
1053
கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் - கரத்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானம் அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று இரத்தலும்; ஓர் ஏஎர் உடைத்து - நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து. ('சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு' (குறள்-963) என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது. அதனை அறிதல், சொல்லுதலுற்று உரைக்கலாகாமைக்கு ஏதுவாய அதன் இயல்பினை அறிதல். அவ்வறிவுடையார்க்கு முன்நிற்றல் மாத்திரமே அமைதலின், 'முன் நின்று' என்றும், சொல்லுதலான் வரும் சிறுமை எய்தாமையின், 'ஓர் ஏஎருடைத்து' என்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி நின்றது.)

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

1054
கரத்தல் கனவிலும் தேற்றாதார்மாட்டு இரத்தலும் - தமக்குள்ளது கரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று ஒன்றனை இரத்தலும்; ஈதலே போலும் - வறியார்க்கு ஈதலே போலும். (உம்மை ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ் பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெட வாராமையின் 'ஈதலே போலும்' என்றார், ஏகாரம் - ஈற்றசை.)

கரப்பிலார் வையகத் துண்மையால் கண்நின்
றிரப்பவர் மேற்கொள் வது.

1055
கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது - சொல்லுதன் மாட்டாது முன் நிற்றல் மாத்திரத்தான் இரப்பார் உயிரோம்பற்பொருட்டு அதனை மேற்கொண்டு போதுகின்றது; கரப்பு இலார் வையகத்து உண்மையான் - அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து உளராய தன்மையானே, பிறிதொன்றான் அன்று. (அவர் இல்லையாயின், மானம் நீக்க மாட்டாமையின் உயிர் நீப்பர் என்பதாம்.)

கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

1056