மக்களே போல்வர் கயவர் - வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்; அவர் அன்ன ஒப்பாரி யாம் கண்டது இல் - அவர் மக்களை யொத்தாற்போன்ற ஒப்பு வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டதில்லை. (முழுதும் ஒத்தல் தேற்றேகாரத்தால் பெற்றாம். 'அவர்' என்றது அவர் மாட்டுளதாய ஒப்புமையை. மக்கட் சாதிக்கும் கயச்சாதிக்கும் வடிவு ஒத்தலின், குணங்களது உண்மை இன்மைகளானல்லது வேற்றுமை அறியப்படாது என்பதாம். இதனான் கயவரது குற்றமிகுதி கூறப்பட்டது.) நன்றறி வாரின் கயவர் திருஉடையர் நெஞ்சத் தவலம் இலர். 1072 நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் - தமக்குறுதியாவன அறிவாரின் அவையறியாத கீழ்மக்கள் நன்மையுடையார்; நெஞ்சத்து அவலம் இலர் - அவர்போல அவை காரணமாகத் தம்நெஞ்சத்தின்கண் கவலையிலராகலான். (நன்று என்பது சாதியொருமை. உறுதிகளாவன, இம்மை மறுமை வீடுகட்கு உரியவாய புகழ் அற ஞானங்கள். இவற்றை அறிவார் இதைச் செய்யாநின்றே 'மிகச் செயப்பெறுகின்றிலேம்' என்றும், செய்கின்ற இவைதமக்கு இடையூறு வருங்கொல் என்றும், இவற்றின் மறுதலையாய பழி பாவம் அறியாமை என்பனவற்றுள் யாது விளையுமோ என்றும் இவ்வாற்றான் கவலை எய்துவர்; கயவர் அப் புகழ்முதலிய ஒழித்துப் பழி முதலிய செய்யாநின்றும் யாதும் கவலை உடையரல்லராகலான், 'திருவுடையர்' எனக் குறிப்பால் இகழ்ந்தவாறு. இதனான் பழி முதலியவற்றிற்கு அஞ்சார் என்பது கூறப்பட்டது.)தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான். 1073 தேவர் அனையர் கயவர் - தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அஃது யாதினான் எனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான். (உணர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பால் தோன்ற நின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று. இதனான், விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது.)
|