அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.1074 கீழ் - கீழாயினான்; அகப்பட்டி ஆவாரைக் காணின் - தன்னிற்சுருங்கிய பட்டியாய் ஒழுகுவாரைக் கண்டானாயின்; அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் - அவ்வொழுக்கத்தின்கண் அவரின் தான் மேம்பட்டு அதனால் தன் மிகுதிகாட்டி இறுமாக்கும். (அகப்பட்டி: அகமாகிய பட்டி, பட்டி போன்று வேண்டியவாறே ஒழுகலின், 'பட்டி' என்றார், 'நோதக்க செய்யும் சிறுபட்டி' (கலித்.குறிஞ்சி.15) என்றார் பிறரும்.)அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாஉண்டேல் உண்டாம் சிறிது. 1075 கீழ்களது ஆசாரம் அச்சமே - கயவரதாய ஆசாரம் கண்டது உண்டாயின், அதற்குக் காரணம் அரசனான் ஏதம் வரும் என்று அஞ்சும் அச்சமே; எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம் - அஃதொழிந்தால், தம்மால் அவாவப்படும் பொருள் அதனால் உண்டாமாயின் சிறிது உண்டாம். (ஆசாரத்தின் காரணத்தை 'ஆசாரம்' என்றும், அவாவப்படுவதனை 'அவா' என்றும் கூறினார். 'எச்சத்தின்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு, இவ்விரண்டானும் அன்றி இயல்பாக உண்டாகாது என்பதாம். வேண்டிய செய்தலே இயல்பு, ஆசாரம் செய்தல் இயல்பன்று என்பது இதனான் கூறப்பட்டது.)அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைக்க லான். 1076 தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் கேட்ட மறைகளை இடந்தோறும் தாங்கிக்கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான்; கயவர் அறை பறை அன்னர் - கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர். (மறை: வெளிப்படின் குற்றம் விளையும் என்று பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல். பிறர், அம்மறைத்தற்குரியார். 'உய்த்து' என்றார், அவர்க்கு அது பெரும்பாரமாதல் நோக்கி. பறை ஒருவன் கையால் தன்னை அறிவித்ததொன்றனை இடந்தோறும் கொண்டு சென்று யாவரையும் அறிவிக்குமாகலான், இது தொழில் உவமம். இதனான் அவரது செறிவின்மை கூறப்பட்டது.)
|