ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு.1077 கயவர் கொடிறு உடைக்கும் கூன் கையர் அல்லாதவர்க்கு - கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு: ஈர்ங்கை விதிரார் - தாம் உண்டு பூசிய கையைத் தெறித்தல் வேண்டும் என்று இரந்தாலும் தெறியார். (வளைந்த கை - முறுக்கிய கை. 'மெலிவார்க்கு யாதும் கொடார்: நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர்' என்பதாம்.)சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். 1078 சொல்லப் பயன்படுவர் சான்றோர் -மெலியர் சென்று தம் குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப் பயன்படுவர் மேலாயினார்; கீழ் கரும்புபோல் கொல்லப் பயன்படும் - மறைக் கீழயினார் கரும்பு போல வலியார் நைய நெருக்கிய வழிப் பயன்படுவர். (பயன்படுதல்: உள்ளது கொடுத்தல். கீழாயினாரது இழிவு தோன்ற, மேலாயினாரையும் உடன் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் கொடுக்குமாறு கூறப்பட்டது.)உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். 1079 உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின் - பிறர் செல்வத்தால் பட்டும் துகிலும் உடுத்தலையும் பாலோடு அடிசில் உண்டலையும் கீழாயினான் காணுமாயின்; பிறர்மேல்வடுக்காண வற்றாகும் - அவற்றைப் பொறாது அவர்மாட்டு வடுவில்லையாகவும் உண்டாக்கவல்லனாம். (உடுப்பது உண்பது என்பன ஈண்டு அவ்வத்தொழில்மேல் நின்றன, அவற்றால், பூண்டல் ஊர்தல் முதலிய பிற தொழில்களும் கொள்ளப்படும். அவற்றைக் கண்ட துணையானே பொறாமை யெய்தலின் 'காணின்' என்றும், கேட்டார் இது கூடும் என்று இயையப் படைத்தல் அரிது ஆகலின் 'வற்றாகும்' என்றும் கூறினார். இதனால், பிறர் செல்வம் பொறாமை கூறப்பட்டது.)
|