காமத்துப்பால்இனி, அப்பொருளைத் துணைக்காரணமாக உடைத்தாய இம்மையே பயப்பதாய இன்பம் கூறுவான் எடுத்துக்கொண்டார். ஈண்டு, 'இன்பம்' என்றது , ஒருகாலத்து ஒருபொருளான் ஐம்புலனும் நுகர்தற்சிறப்புடைதாய காம இன்பத்தினை. இச் சிறப்புப் பற்றி வடநூலுள் போசராசனும் 'சுவைபல என்று கூறுவார் கூறுக ; யாம் கூறுவது இன்பச் சுவை ஒன்றனையுமே,' என இதனையே மிகுத்துக் கூறினான். இது புணர்ச்சி, பிரிவு என இருவகைப்படும். ஏனை இருத்தல், இரங்கல், ஊடல் என்பனவோ எனின், இவர் பொருட்பாகுபாட்டினை அறம், பொருள், இன்பம என வடநூல் வழக்குப் பற்றி ஓதுதலான், அவ்வாறே அவற்றைப் பிரிவின்கண் அடக்கினார் என்க. களவியல்இனி, அவை தம்மையே தமிழ் நூல்களோடும் பொருந்தப் புணர்ச்சியைக் 'களவு' என்றும், பிரிவைக் 'கற்பு' என்றும் என்றும் பெரும்பான்மை பற்றி வகுத்து, அவற்றைச் சுவை மிகுதி பயப்ப உலகநடையோடு ஒப்பும் ஒவ்வாமையும் உடையவாக்கிக் கூறுகின்றார். அக் கைகோள் இரண்டனுள்ளும் களவாவது, பிணி, மூப்பு, இறப்புக்கள் இன்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் உருவும் திருவும் பருவமும் குலனும் குணனும் அன்பும் முதலியவற்றால், தம்முள் ஒப்புமை உடையராய தலைமகனும் தலைமகளும், பிறர் கொடுப்பவும் அடுப்பவும் அன்றிப், பால் வகையால் தாமே எதிர்ப்பட்டுப் புணர்ந்து வருவது.அதனை ஏழு அதிகாரத்தால் கூறுவான் தொடங்கி, முதற்கண் தகை அணங்கு உறுத்தல் கூறுகின்றார்
|