பக்கம் எண் :

439
(ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது என வரைவுகடாய தோழிக்குச் சொல்லியது.) (நீ சொல்லுகின்ற தொக்கும்) வளி இடை போழப்படா முயக்கு - ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்; வீழும் இருவர்க்கு இனிதே - ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே. (முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. 'ஈண்டு இருவர் இல்லை இன்மையான், இஃது ஒவ்வாது' என்பது கருத்து. களவிற்புணர்ச்சியை மகிழ்ந்து வரைவு உடன்படான் கூறியவாறு.)

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

1109
(கரத்தல் வேண்டாமையின், இடையறிவு இல்லாத கூட்டமே இன்பப் பயனுடைத்து என வரைவு கடாவியாட்குச் சொல்லியது.) ஊடல் உணர்தல் புணர்தல் இவை - புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை அளவறிந்து நீங்குதலும், அதன்பின் நிகழ்வதாய அப்புணர்ச்சிதானும் என இவை அன்றே; காமம் கூடியார் பெற்ற பயன் - வரைந்து கொண்டு காமத்தை இடைவிடாது எய்தியவர் பெற்ற பயன்கள்? ('ஆடவர்க்குப் பிரிவு என்பது ஒன்று உளதாதல் மேலும், அதுதான் பரத்தையர் மாட்டாதலும், அதனையறிந்து மகளிர் ஊடி நிற்றலும், அவவூடலைத் தவறு செய்தவர் தாமே தம் தவறின்மை கூறி நீக்கலும், பின்னும் அவ்விருவரும் ஒத்த அன்பினரய்க் கூடலுமன்றே முன்வரைந்தெய்தினார் பெற்ற பயன். அப்பயன் இருதலைப் புள்ளின் ஓருயிராய் உழுவலன்புடைய எமக்கு வேண்டா', என அவ்வரைந் தெய்தலை இகழ்ந்து கூறியவாறு.)

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

1110
(புணர்ந்து உடன் போகின்றான் தன்னுள்ளே சொல்லியது.) அறிதோறு அறியாமை கண்டற்று - நூல்களானும் நுண்ணுணர்வானும் பொருள்களை அறிய முன்னை அறியாமை கண்டாற்போலக் காணப்படாநின்றது; சேயிழைமாட்டுச் செறிதோறும் காமம் - சிவந்த இழையினையுடையாளை இடைவிடாது செறியச்செறிய இவள்மாட்டுக் காதல்.