கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று.1146 (இடையீடுகளானும் அல்ல குறியானும் தலைமகனை எய்தப்பெறாத தலைமகள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவு கடாயது.) கண்டது ஒரு நாள் - யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு ஞான்றே; அலர் திங்களைப் பாம்பு கொண்டற்று -அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகமெங்கும் பரந்தது. (காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'பாம்பு கொண்டற்று' என்றாள். இருவழியும் மன்னும், உம்மையும் அசைநிலை. 'காட்சியின்றியும் அலர் பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல் வேண்டும்', என்பதாம்.) ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய். 1147 (வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும் எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது.) இந்நோய் - இக்காம நோயாகிய பயிர்; ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும் - இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளராநின்றது. ('ஊரவர்' என்பது தொழிலான் ஆணொழித்து நின்றது. ஏக தேச உருவகம். சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன என்பதாம். வரைவானாதல் பயன்.)நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல். 1148 (இதுவும் அது.) கௌவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும். (மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.)
|