படல்ஆற்றா பைதல் உழக்கும் கடல்ஆற்றாக் காமநோய் செய்தஎன் கண்.1175 (இதுவும் அது) கடல் ஆற்றா காமநோய் செய்த என்கண்- எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காம நோயைச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும் -அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன. (காமநோய் காட்சியான் வந்ததாகவின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது) ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது. 1176 (இதுவும் அது.) எமக்கு இந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது- எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது; ஓஒ இனிதே - மிகவும் இனிதாயிற்று. ('ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச்சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம்)உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண். 1177 (இதுவும் அது) விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண் - விழைந்து உள்நெகிழ்ந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்; உழந்துழந்து உள்நீர் அறுக-இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக. (அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது) பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணா தமைவில கண். 1178 ('காதலர் பிரிந்து போயினாரல்லர், அவர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் பெற வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.)
|