பக்கம் எண் :

467

பேணாது பெட்டார் உளர்-நெஞ்சால் விழையாதுவைத்துச் சொல்மாத்திரத்தால விழைந்தவர் இவ்விடத்தே உளர்; மற்று அவர்க்கண் காணாது அமைவில - அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்?(செயலாற் பிரிந்துநின்றமையின் 'பேணாது' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமும் வன்புறையும் கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது, 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. 'ஓகாரம்' அசைநிலை. யான் ஆற்றவும் கண்கள் அவரைக் காண்டற்கு விரும்பாநின்றன என்பதாம். இனிக் 'கொண்கனை'என்று பாடமாயின் 'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை. இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ'? என்று உரைக்க. இதற்கு 'மன்' அசைநிலை)

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
1179
('நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) வாராக்கால் துஞ்சா - காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா; வரின் துஞ்சா - வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா; ஆயிடைக்கண் ஆரஞர் உற்றன- ஆதலான் அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினை உடைய ('ஆயிடை' எனச் சுட்டு நீண்டது. 'இனி அவற்றிற்குத் துயில் ஒரு ஞான்றும் இல்லை' என்பதாம்)

மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து.

1180
('காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது) எம் போல் அறைபறை கண்ணார் அகத்து மறை பெறல் - எம்மைப் போலும் அறைபறையாகிய கண்ணிணையுடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய மறையையறிதல்; ஊரார்க்கு அரிதன்று - இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது.