அதிகாரம் 120. தனிப்படர் மிகுதி [அது , தனியாகிய படர் மிகுதி என விரியும் .அஃதாவது , படர் மிகுதி தலைவன்கண் இன்றித் தன்கண்ணதேயாதல் கூறுதல் .அறமும் பொருளும் நோக்கிப் பிரிதலின் , அவன்கண் இல்லையாயிற்று . இது , பசப்புற்று வருந்தியாட்கு உரியதாகலின் , பசப்புறு பருவரலின் பின் வைக்கப்பட்டது.]
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. 1191 ('காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர், நீ அவரோடு பேரின்பம் நுகர்தி', என்ற தோழிக்குச் சொல்லியது.) தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர் - தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர்; பெற்றாரே காமத்துக் காழ்இல் கனி - பெற்றாரன்றே காம நுகர்ச்சி என்னும் பரல் இல்லாத கனியை. (காமம்: ஆகுபெயர். 'அத்து' அல்வழிக்கண் வந்தது. முன்னை நல்வினை இல்வழிப் பெறப்படாமையின் 'பெற்றார்' என்றும், அவரால் தடையின்றி நுகரப்படுதலின் 'காழில் கனி' என்றும் கூறினாள். 'நம் காதலர் பிரிதலேயன்றிப் பின் வாராமையும் உடைமையின் அக்கனி யாம் பெற்றிலேம்' என்பதா யிற்று.) வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. 1192 (இதுவும் அது.) வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி - அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி; வாழ்வார்க்கு வானம் பயந்தற்று - தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற் போலும். ('நம் காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு உள்ளது' என்பதாம்.) வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுநம் என்னும் செருக்கு. 1193
|