பக்கம் எண் :

479

(கண்ணளவான் எதிர்ப்படுதலாவது: மதி இருவரானும் நோக்கப்படுதலின் இருவர் கண்ணும் அதன் கண்ணே சேர்தல். முதலோடு சினைக்கு ஒற்றுமை உண்மையின். 'சென்றாரைக் காண'என்றும் குறையுறுகின்றாளாகலின், 'வாழி' என்றும் கூறினாள். இனிப் 'படாது' என்பது பாடமாயின், கனவிடைக் கண்ணினாற் காணுமாறு மதிபடுகின்றதில்லை என அதனால் துயில் பெறாது வருந்துகினறாள் கூற்றாக்குக. இப்பொருட்கு 'வாழி'என்பது அசை நிலை)

அதிகாரம் 122. கனவுநிலை உரைத்தல்

[ அஃதாவது , தலைமகள் தான் கண்ட கனவினது நிலைமையைத் தோழிக்குச் சொல்லுதல் . அக் கனவு, நனவின்கண் நினைவு மிகுதியாற்கண்டதாகலின் , இது நினைந்தவர் புலம்பலின் பின் வைக்கப்பட்டது .]

காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து.

1211
(தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது). காதலர் தூதொடு வந்த கனவினுக்கு -யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு என் மாட்டு வந்த கனவினுக்கு; விருந்து யாது செய்வேன் -விருந்தாக யாதனைச் செய்வேன்? ('விருந்து' என்றது விருந்திற்குச் செய்யும் உபசாரத்தினை. அது கனவிற்கு ஒன்று காணாமையின், 'யாது செய்வேன்' என்றாள்.)

கயல்உண்கண் யான்இரப்பத் துஞ்சிற் கலந்தார்க்
குயல்உண்மை சாற்றுவேன் மன்.

1212
(தூது விடக் கருதியாள் சொல்லியது, ) கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் - துஞ்சாது வருந்துகின்ற என் கயல் போலும் உண்கண்கள் யான் இரந்தால் துஞ்சுமாயின்; கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் - கனவிடைக் காதலரைக் காண்பேன், கண்டால் அவர்க்கு யான் ஆற்றியுளேனாய தன்மையை யானே விரியச் சொல்வேன்.