பக்கம் எண் :

480

('கயலுண்கண்' என்றாள்,கழிந்த நலத்திற்கு இரங்கி. உயல் - காம நோய்க்குத் தப்புதல்.
தூதர்க்குச் சொல்லாது யாம் அடக்குவனவும், சொல்லுவனவற்றுள்ளும் சுருக்குவனவற்றின் பரப்பும் தோன்றச் சொல்வேன் என்னும் கருத்தால், 'சாற்றுவேன்'என்றாள். இனி, அவையும் துஞ்சா: சாற்றலுங்கூடாது என்பது படநின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. முன்னும் கண்டாள் கூற்றாகலின், கனவு நிலை உரைத்தலாயிற்று.)

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
1213
(ஆற்றாள் எனக் கவன்றாட்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.) நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை; கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின்கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது. (மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சியானே யான் ஆற்றியுளேன் ஆகின்றேன். நீ கவலல் வேண்டா', என்பதாம்.)

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

1214
(இதுவும் அது.) நனவினான் நல்காரை நாடித்தரற்கு - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக் கொண்டு வந்து கனவு தருதலான்; கனவினான் காமம் உண்டாகும் - இக் கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகா நின்றது. (காமம் - ஆகுபெயர். நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. 'இயல்பான் நல்காதவரை அவர் சென்ற தேயம் அறிந்து சென்று கொண்டு வந்து தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல்' என்பதாம்.)

நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

1215
(இதுவும் அது.) நனவினான் கண்டதூஉம் (இனிது) ஆங்கே - முன் நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று, அப்பொழுதே; கனவும் தான் கண்டபொழுதே இனிது - இன்று கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன.