(இனிது' என்பது முன்னும் கூட்டப்பட்டது. கனவு -ஆகுபெயர். முன்னும் யான் பெற்றது இவ்வளவே, இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம்.) நனவென ஒன்றில்லை ஆயின் கனவினான் காதலர் நீங்கலர் மன்.1216 (இதுவும் அது.) நனவென ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார். ('ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது. அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. கனவிற் பெற்று ஆற்றுகின்றமை கூறியவாறு.) நனவினான் நல்காக் கொடியார் கனவினான் என்எம்மைப் பீழிப் பது. 1217 (விழித்துழிக் காணளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது.) நனவினான் நல்காக் கொடியார் - ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாத கொடியவர்; கனவின்கண் வந்து எம்மைப் பீழிப்பது என் - நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி? (பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கிக் 'கொடியார்' என்றும் கனவில் தோள்மேலராய் விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது என்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள். 'நனவின் இல்லது கனவினும் இல்லை' என்பர், 'அது கண்டிலம்', என்பதாம்.) துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. 1218 (தான் ஆற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்தாட்கு இயற்பட மொழிந்தது.) துஞ்சுங்கால் தோள் மேலராகி - என் நெஞ்சு விடாது உறைகின்ற காதலர் யான் துஞ்சும் பொழுது வந்து என் தோள் மேலராய்; விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தர் ஆவர் - பின் விழிக்கும் பொழுது விரைந்து பழைய நெஞ்சின் கண்ணராவர்.
|