(அவ்வியற்பழிப்புப் பொறாது தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) நெஞ்சே - நெஞ்சே; கொடியார்க்கு என் வாடு தோள் பூசல் உரைத்து - இவள் கொடியார் என்கின்றவர்க்கு நீ சென்று என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி; பாடு பெறுதியோ - ஒரு மேம்பாடு எய்தவல்லையோ? வல்லையாயின் அதனை ஒப்பதில்லை. ('கொடியார்க்கு' என்பது கொடியர் அல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச்சொல். 'வாடு தோள்' என்பது அவை தாமே வாடாநின்றன என்பது தோன்ற நின்றது. பூசல்: ஆகுபெயர். அஃது அவள் தோள் நோக்கி இயற்பழித்தல் மேலும், அதனால் தனக்கு ஆற்றாமை மிகன் மேலும் நின்றது. 'நின்னுரை கேட்டலும் அவர் வருவர்; இவையெல்லாம் நீங்கும்; நீங்க எனக்குக் காலத்தினாற்செய்த நன்றியாமாகலின், அதன் பயனெல்லாம் எய்துதி' என்னும் கருத்தால் 'பாடு பெறுதியோ'? என்றாள்.) முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். 1238 (வினைமுடிதது மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ? ('இனிக்கடிதிற் செல்லவேண்டும்' என்பது கருத்து.)முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். 1239 (இதுவும் அது.) முயக்கிடைத் தண் வளி போழ - அங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்ற - அத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக் கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன?
|