பக்கம் எண் :

492

(உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தகுவது' என்பதாம்.)

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
1246
(தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது.) என் நெஞ்சே, கலந்து உணர்த்தும் காதலர்க்கணடால் புலந்து உணராய் - யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை நீக்க மாட்டாய்; பொய்க்காய்வு காய்தி - அதுவும் மாட்டாத நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயாநின்றாய், இனி இதனை ஒழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக. ('கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது. அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி , அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. 'கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை' என்பதாம்.)

காமம் விடுஒன்றோ நாண்விடு நல்நெஞ்சே
யானோ பொறேன்இவ் இரண்டு.

1247
(நாண் தடுத்தலின், அச்செலவு ஒழிவாள் சொல்லியது.) நல் நெஞ்சே - நல்ல நெஞ்சே; ஒன்று காமம் விடு - ஒன்றின் நாண் விடமாட்டாயாயின் காம வேட்கையை விடு; (ஒன்று) நாண் விடு - ஒன்றின் அது விடமாட்டாயாயின் நாணினை விடு; இவ்விரண்டு யானோ பொறேன் - அன்றியே இரண்டும் விடாமை நின் கருத்தாயின், ஒன்றற்கொன்று மறுதலையாய இவ்விரண்டனையும் உடன் தாங்கும் மதுகை யான் இலன். ('யானோ' என்னும் பிரிநிலை, 'நீ பொறுப்பினும்' என்பதுபட நின்றது. 'நல்நெஞ்சே' என்றது, இரண்டையும் விடாது பெண்மையை நிலைபெறுத்தலின், 'நல்லை' என்னும் குறிப்பிற்று. 'அது நன்றே எனினும் என் உயிருண்டாதல் சாலாமையின், அதற்கு ஆகின்றிலேன்', என்பதாம். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.)