பக்கம் எண் :

493
பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
1248
(இதுவும் அது) என் நெஞ்சு - என் நெஞ்சே; அவர் பிரிந்து நல்கார் என்று - அவர் இவ்வாற்றாமையை அறியாமையின் நொந்து வந்து தலையளி செய்யாராயினார் என்று கருதி; பிரிந்தவர்பின் ஏங்கிச் செல்வாய் பேதை- அறிவித்தற் பொருட்டு நம்மைப் பிரிந்து போயவர்பின் ஏங்கிச் செல்லலுற்ற நீ யாதும் அறியாய் (ஆற்றாமை கண்டு வைத்தும் நல்காது போயினாரைக் காணா வழிச்சென்று அறிவித்த துணையானே நல்க வருவர் என்று கருதினமையின் 'பேதை' என்றாள்.)

உள்ளத்தார் காத லவர்ஆக உள்ளிநீ
யாருழைச் சேறிஎன் நெஞ்சு

1249
(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து? ('உள்ளம்' என்புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்றவரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை
உடைத்து, அதனை ஒழி' என்பதாம்.)

துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

1250
(அவரை மறந்து ஆற்றல் வேண்டும் என்பதுபடச் சொல்லியது.) துன்னாத துறந்தாரை நெஞ்சத்து உடையேமா - நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்பேம். ('குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்' (குறுந்.கடவுள்வாழ்த்து) என்புழிப்போல் 'நெஞ்சு' என்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது. 'அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும். நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன பொய்க்கவினே அன்றி நின்ற நிறையும் இழப்பேம்' என்பதாம்.)