பக்கம் எண் :

494

அதிகாரம் 126. நிறை அழிதல்

[ அஃதாவது, தலைமகள் மனத்து அடக்கற்பாலனவற்றை வேட்கை மிகுதியான் அடக்க மாட்டாது வாய்விடுதல். 'நிறையெனப்படுவது மறைபிறர் அறியாமை'(கலித். நெய்தல்.16) என்றார் பிறரும். அஃது அழிதற்காரணம் நெஞ்சொடு கிளந்தமையின் , இதுநெஞ்சொடு கிளத்தலின் பின் வைக்கப்பட்டது.]

காமக் கணிச்சி உடைக்கும் நிறைஎன்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

1251
(நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு - நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவினை; காமக் கணிச்சி உடைக்கும் - காம வேட்கையாகிய கணிச்சி முரியாநின்றது, இனி அவை நிற்றலும் இல்லை, யான் ஆற்றலும் இல்லை. (கணிச்சி - குந்தாலி. நாணுள்ள துணையும் நிறையழியாதாகலின் அதனைத் தாழாக்கியும், அகத்துக் கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும் , வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டனையும் ஒருங்கு நீக்கலின், தன் காம வேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினாள்.)

காமம் எனஒன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

1252
(நெஞ்சின்கண் தோன்றிய காமம் நெஞ்சால் அடக்கப்படும் என்றாட்குச் சொல்லியது.) யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழில் ஆளும் - எல்லாரும் தொழிலொழியும் இடை யாமத்தும் என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றது; காமம் என ஒன்று கண் இன்று - ஆகலாற் காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று கண்ணோட்டம் இன்றாயிருந்தது. ('ஓ' என்பது இரக்கக் குறிப்பு. தொழிலின்கண்ணேயாடல் - தலைமகன்பாற் செலவிடுத்தல். தாயைப் பணி கோடல் உலகியலன்மையின் 'காமம் என ஒன்று' என்றும் அது தன்னைக் கொள்கின்றது அளவறியாது கோடலின் 'கண்ணின்று' என்றும் கூறினாள். அடக்கப்படாமை கூறியவாறு.)