(செய்த குறிப்பு-செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், 'செறிதொடி செய்திறந்த கள்ளம்' (குறள். 1275)என்றானாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.) பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு.1280 (தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக்கு அறிவுறுத்தது.) காமநோய் கண்ணினால் சொல்லி இரவு - மகளிர் தம் காம நோயினைத் தோழியர்க்கும் வாயாற்சொல்லாது கண்ணினாற் சொல்லி அது தீர்க்கவேண்டும் என்று அவரை இரவாது உடன்போதல் குறித்துத் தம் அடியினை இரத்தல்; பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப - தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் அறிந்தோர். (தலைமகளது உடன் போதல் துணிபு தோழியால் தெளிந்தானாகலின், தன் பிரிவின்மைக் குறிப்பினை அறிவுறுப்பான், அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியந்து கூறியவாறு.)
அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல்[ அஃதாவது , தலைமகனும் தலைமகளும் புணர்ச்சிக்கண்ணே விரைதல் . மேற் புணர்ச்சி மிகுதிபற்றித் தலைமகன் பிரிதற் குறிப்பு அறிவுறுத்தத் தலைமகள் , அவன் மாட்டே நிகழாது வேட்கை மிகவினாற் பின்னும் தன்கண்ணே நிகழ்தலான் . இது குறிப்பு அறிவுறுத்தலின் பின் வைக்கப்பட்டது.]
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. 1281 (பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக் காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) உள்ளக்களித்தலும் - நினைந்த துணையானே களிப்பெய்தலும்; காண மகிழ்தலும் - கண்ட துணையானே மகிழ்வெய்தலும்; கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு.
|