அழகு ஆம். (உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீர் தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடை ஆகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது தொடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபால் கோடாமையாவது அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.) சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உள்கோட்டம் இன்மை பெறின்.119 செப்பம் சொற்கோட்டம் இல்லது - நடுவு நிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின் (சொல் : ஊழான் அறுத்துச் சொல்லுஞ் சொல். காரணம் பற்றி ஒருபால் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறம் கிடந்தவாறு சொல்லுதல் நடுவு நிலைமையாம்; எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவு நிலைமை அன்று என்பது பெறப்பட்டது. அஃது அன்னதாவது மனத்தின் கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின் என்றவாறு.)வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின். 120 பிறவும் தமபோல் பேணிச் செயின் -பிறர் பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகம் செய்வார்க்கு வாணிகம் - வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய் வாணிகம் ஆம். (பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின்; எனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின்.)
|