அதிகாரம் 13. அடக்கம் உடைமை (அஃதாவது, மெய், மொழி, மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் உடையன் ஆதல். அஃது ஏதிலார் குற்றம்போல் தம் குற்றமும் காணும்(குறள்.190) நடுவுநிலைமை உடையார்க்கு ஆகலின், இது நடுவு நிலைமையின்பின் வைக்கப்பட்டது.) அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.121 அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். ( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.) காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூங் கில்லை உயிர்க்கு. 122 உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க - ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. (உயிர் என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.) செறி்வறிந்து சீர்மை பயக்கும் அறி்வறிந் தாற்றின் அடங்கப் பெறின். 123 அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் - அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும் - அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும். (இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது, மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல்.)
|