பக்கம் எண் :

70
யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் - யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை - மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை. (அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், 'யார் மாட்டும்' என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.)

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.

163
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் - மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு அறுப்பான் - பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உதவாது அழுக்காற்றைச் செய்வான். ('அழுக்கறுத்தல்' எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாகும்.)

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் - அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து - அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து. (அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.)

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

165
ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது - அழுக்காறு பகைவரைஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும். ('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.)