பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.) அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையால் காணப் படும். 185 அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றானல்லன் என்பது; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ் சொல்லுதற்குச் காரணமான மனப்புன்மையானே அறியப்படும். (மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.) பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும். 186 பிறன் பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் - தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும். ('புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியார்க்கு அவ்வளவன்றி அவன் இறந்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்.) பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். 187 பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - தம்மை விட்டு நீங்கும் ஆற்றால் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்; நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் - கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார். (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பவர் என்ற கருத்தான், 'அயலாரோடும்' என்பது வருவித்துரைக்கப்பட்டது. 'அறிதல்' தமக்கு உறுதி என்று அறிதல். "கடியுமிடந் தேற்றான்
|