பக்கம் எண் :

108

45. பெரியாரைத் துணைக்கோடல்

பெரியாரைத் துணைக்கோடலாவது தம்மின் முதிர்ந்த அறிவுடையாரைத் தமக்குத் துணையாகக் கொள்ளுதல். அரசன் குற்றம் அற்றானாயினும், தன்னின் முதிர்ந்த அறிவுடையாரைத் துணையாகக் கொண்டு வினைசெய்ய வேண்டுதலின், இஃது அதன்பின் கூறப்பட்டது.

441 அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே; தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்.

பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை.

1

442 உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

அரசர் தமக்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்னே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க.

பெற்றியாரென்று பொதுப்படக்கூறினமையால், இது மந்திரிகளைக் கூட்டுமாறு கூறிற்று.

2

443 அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க.

இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.

3