பக்கம் எண் :

38

38. ஊழ்
 

1. ஆகுஊழால் தோன்றும் அசைவின்மை: கைப்பொருள்
போகுஊழால் தோன்றும் மடி.

கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும்; கைப்பொருள் போவதற்குக் காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும். 371
 

2. பேதைப் படுக்கும் இழவுஊழ்: அறிவகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை.

பொருள் இழத்தற்குக் காரணமான ஊழ், பேதை யாக்கும்; பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ், அறிவைப் பெருக்கும். 372
 

3. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.

ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும், ஊழிற்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும். 373
 

4. இருவேறு உலகத்து இயற்கை: திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

உலகத்தின் இயற்கை, ஊழின் காரணமாக இருவேறு வகைப்படும்; செல்வம் உடையவராதலும் வேறு, அறிவு உடையவராதலும் வேறு. 374
 

5. நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு, ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு; தீயவை நல்லவை ஆதலும் உண்டு. 375
 

6. பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருள்கள் வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போகும்; தமக்கு உரியவை கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகா. 376
 

7. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும் அவற்றை நுகர முடியாது. 377
 

8. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால், நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்கொள்வர். 378
 

9. நன்றுஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆம்கால்
அல்லற் படுவது எவன்?

நல்வினை விளையும்போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றவர், தீவினை விளையும்போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ? 379
 

10. ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும். 380