பக்கம் எண் :

4

4. அறன்வலியுறுத்தல்
 

1. சிறப்ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு?

அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது? 31
 

2. அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.

ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தைவிட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை. 32
 

3. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். 33
 

4. மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்துஅறன்;
ஆகுல நீர பிற.

ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. 34
 

5. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும். 35
 

6. அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை.

இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும். 36
 

7. அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா. 37
 

8. வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும். 38
 

9. அறத்தான் வருவதே இன்பம்:மற் றெல்லாம்
புறத்த; புகழும் இல.

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை. 39
 

10. செயற்பாலது ஓரும் அறனே: ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே, செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே. 40