94. சூது |
931. | வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் |
| தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. |
|
வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும். |
932. | ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் |
| நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. |
|
ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது? |
933. | உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம் |
| போஒய்ப் புறமே படும். |
|
பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும்அவனைவிட்டு நீங்கிவிடும். |
934. | சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் |
| வறுமை தருவதொன் றில் |
|
பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைக் கெடுத்து, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை. |
935. | கவறும் கழகமும் கையும் தருக்கி |
| இவறியார் இல்லாகி யார். |
|
சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள். |