பங்கள் நுகர்தற்குப் பொருள் தேவை ; ஆதலின் , அறவினைகளை மூப்பு வந்தபின் செய்வேம்,' என்று நினைத்தலாகாது என்னுங் கருத்தை உட்கொண்டு நின்றது. கைத்து - கையிலுள்ளது ; அது கைப்பொருள் ; செல்வம். இளமைப் பருவத்தைக் ‘கைத்துண்டாம் போழ்து, என்று விதந்தார். அப்பருவமே முயன்று பொருள் தேடுதற்குரிய காலமாகலின், ‘கனியொழிய' என்பதை இரட்டுற மொழிதலாகக் கொண்டு, பழங்கள் உதிராமல் மரத்தில் நிற்கக் , காய்கள் உதிர்ந்துவிடுதலும் உண்டு எனவும் ஒரு கருத்துக்கொள்க. மூப்புடையோர் இறவாமுன் இளமையுடையோர் இறந்து போதலும் உண்டு என்பது இதன் கருத்து. காயுதிர்தல் சிறுபான்மையாகலின், காயுதிர்தலும் என எதிர்மறையும்மை கொடுக்கப்பட்டது. (9) 20. ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால் தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப் பிள்ளையைத் தாய் அலறக் கோடலான் மற்றதன் கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. (பொ-ள்.)ஆள் பார்த்து - தான் உயிர் பிரித்துக் கொண்டு போகும் ஆளைக் கருதி, உழலும் - அதே வேலையாகத் திரிகின்ற, அருள் இல் கூற்று - இரக்கம் இல்லாத கூற்றுவன், உண்மையால் - ஒருவன் இருக்கின்றானாதலால், தோள் கோப்பு - மறுமையாகிய வழிக்குக் கட்டுச் சோறு போல் உதவும் புண்ணியத்தை, காலத்தால் - இளமையாகிய தக்க காலத்திலேயே , கொண்டு உய்ம்மின் - உண்டாக்கிக் கொண்டு பிழையுங்கள், பீள் பிதுக்கி - முற்றாத இளங்கருவையும் வெளிப்படுத்தி, பிள்ளையை - குழந்தையை, தாய் அலறக் கோடலான் - தாய் அலறியழும் படி உயிர் கொள்ளுதலால், அதன் கள்ளம் - அக்கூற்றுவனது கடுமையை, கடைப்பிடித்தல் நன்று - நினைவில் இருத்திக் காரியங்கள் செய்தல் நல்லது. (க-து.)இளங் கருவையும் அழிக்கும் கூற்றுவன் உண்மையால் இளமை நிலையாமை விளக்கமாதலின், இம்மை மறுமைக்குரிய புண்ணிய காரியங்களை இளமை யுடையோர் உடனே செய்துகொள்ள வேண்டும்.
|