பக்கம் எண் :

22
 
இறந்து மண்ணானார் என்று, எடுத்துத் தூற்றப்பட்டார் அல்லால் - குறித்து இழித்துரைக்கப்பட்டாரேயல்லாமல், எஞ்சினார் இவ்வுலகத்து இல் - இறவாமல் நின்றவர் இவ்வுலகத்தில் இல்லை.

(க-து.)மக்களாய்ப் பிறந்தவர் எத்தகையோ ராயினும் அவர் இறந்து போதல் உறுதியாதலின், இருக்கும் போதே யாவரும் அறஞ் செய்து கொள்க.

(வி-ம்.)‘யானைத் தலை' என்றதற்கேற்ப உவமையிலும் ‘மலையின் உச்சி' யென்று உரைத்துக் கொள்க. குடையர் - குடையையுடையராய் அதன் நிழலில் இருக்கும் அரசர். குடையரும் என உயர்வுசிறப்புக் கொள்க. இறுதியில் ‘இவ்வுலகத்து' என வருதலின் ‘நிலமிசை' யென்றது. மண்ணில் என்னும் பொருட்டு, மண்ணில் வீழ்ந்து மண்ணோடு மண்ணானார் என்பது குறிப்பு. எத்துணை உயரத்தில் ஏறிச் சென்றோர்க்கும் முடிவில் இருப்பிடம் மண்ணே எனவும் ஒரு நயம் காண்க. எனவே ஏனையோர் இறத்தல் பற்றிக் கூற வேண்டாதாயிற்று. இறந்தாரென்னுஞ் சொல் இழிவு தருதலின், தூற்றப்பட்டார் எனப்பட்டது.

(1)

22. வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின் ; யாரும்
நிலவார் நிலமிசை மேல்.

(பொ-ள்.)வாழ்நாட்கு - ஆயுள்நாட்களுக்கு, அலகா - அளவு காணும்படி, வயங்கு ஒளி மண்டிலம் - விளக்குகின்ற கதிரவன் என்னும் ஒளிவட்டம், வீழ்நாள் படாது எழுதலால் - வீண் நாள் படாமல் தொடர்பாகக் தோன்றி வருவதனால், வாழ்நாள் உலவாமுன் - அம் முறையே கணக்கிடப்பட்டு ஆயுள்நாள் அற்றுப்போகுமுன், ஒப்புரவு ஆற்றுமின் - உதவி செய்யுங்கள்; மேல் - அந்த ஆயுள் நாளுக்குமேல், யாரும் நிலவார் நிலமிசை - யாரும் இவ்வுலகத்தில் நிலைக்கமாட்டார்கள்.

(க-து.)கதிரவன் நாடோறுந் தோன்றுதலால் நாட்கணக்குத் தெரிதலின், அக் கணக்குக் கொண்டு வாழ்நாள் கழியுமுன் அறஞ் செய்துகொள்க.