(வி-ம்) அலகா - அலகாக, அஃதாவது அலகு கண்டு கொள்ளும் வகையில் , அலகு - அளவு ; ஒளி மண்டிலம் - இங்கே பகலவன். ஒரு நாளாவது தவறாமல் என்றற்கு ‘வீழ்நாள் படாது' எனப்பட்டது. வீழ்நாள்; தவறும் நாள் ; தப்பிப்போகும் நாள் உண்டாகாதபடி என்பது பொருள். நிலவார் என்பதற்கு பகுதி நில் என்பதாகலின், நிலைக்கமாட்டார் எனப பொருளுரைக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுதலாலேயே இருவரறிவும் ஒத்து இணக்கமுறுதலின், உதவி ‘ஒப்புரவு' எனப்பட்டது. (2) 23. மன்றம் கறங்க மணப்பாறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் -பின்றை ஒலித்தலும் உண்டாமென் றுய்ந்துபோம் ஆறே வலிக்குமாம் மாண்டார் மனம். (பொ-ள்.)மன்றம் கறங்க - பேரவை முழுதும் ஒலிக்கும்படி, மணப்பறையாயின - திருமண மேளமாய் முழங்கியவை, அன்று அவர்க்கு ஆங்கே - திருமண நாளன்று திருமண மக்களுக்கு அத்திருமணக் கூடத்திலேயே, பிணப்பறையாய் பின்றை ஒலித்தலும் உண்டாம் என்று - சாவுமேளமாய்ப் பின்பு ஒலித்தலும் நேருமெனக் கருதி, உய்ந்து போம் ஆறே - நன்னிலையுற்றுச் செல்லுவதற்கான அறவழியிலேயே, வலிக்குமாம் மாண்டார் மனம் - அறிவு மாட்சிமைப்பட்டோரது நன்மனம் துணிந்து நிற்கும் என்ப. (க-து.)மணப்பறையே பிணப்பறையாகவும் மாறுமாதலின், யாக்கையின் நிலையின்மை கருதி உடனே அறஞ்செய்க. (வி-ம்.)மன்றம் - அவை ; இங்கே, திருமணப் பேரவை, மணமக்கள் ஆணும் பெண்ணுமாயிருத்தலின் அவ்விருபாலார்க்கும் பொருந்த ‘அவர்க்கு' எனப் பலர் பாலாற் கூறினார். பெரும்பான்மை யன்றாகலின் ‘ஒலித்தலும் உண்டாம்' என்னும் உம்மை எதிர்மறை. ‘உய்ந்து போம் ஆறு' ,என்றது, பொதுவாக அறவழி. ஏகாரம்: பிரிநிலை. இளமையைத் துய்ப்பதா அறவழியிற் செல்வதா என இருதலைப்பட்டு ஐயுறும்போது, மாட்சிமைப்பட்
|