படும் அறங்கள், தனக்கு அணி ஆம் - ஒருவனுக்கு அழகாகும். (க-து.) நெல்லுங் கரும்புங் கழனிக்கு அழகு; தாமரை குளத்துக்கு அழகு; நாணம் பெண்மைக்கு அழகு;அறங்கள் ஆண்மைக்கு அழகாகும். (வி-ரை.) நெல்லையுங் கரும்பையும் நோக்கி நிலம் மருத நிலமாகிய வயல் எனப்பட்டது.என்ப : பகரமென்னும் பல்லோர் படர்க்கை விகுதிபெற்ற எதிர்கால வினைமுற்று.பெண்மை நலம் : இருபெயரொட்டு; பெண்மை - பெண்டிரின் றன்மை; பெண்மை நலம் -கற்பு. (11) 12. கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர மந்திரத் தாற்பிணிப்பர் மாநாகம் - கொந்தி இரும்பிற் பிணிப்பர் கயத்தைச்சான் றோரை நயத்திற் பிணித்து விடல். (இ-ள்.)களிற்றை - யானையை, கந்தின் பிணிப்பர் - கட்டுத் தறியினால் வயப்படுத்துவர் (பாகர்); மா நாகம்-நல்ல பாம்பை, கதம்தவிர - அதன் சீற்றந் தவிரும்படி, மந்திரத்தால் பிணிப்பர் - மந்திரத்தினால் வயப்படுத்துவர் (மாந்திரிகர்); கயத்தை - கீழ்மகனை, கொந்தி - உடம்பை ஒறுத்து, இரும்பின் பிணிப்பர் - விலங்கினால் வயப்படுத்துவர் (அரசர்); சான்றோரை - பெரியோரை, நயத்தின் - இன்சொல் முதலியவற்றால், பிணித்து விடல் - வயப்படுத்திவிடுக (அறிவுடையோர்). (க-து.) யானையைத் தறியாலும், பாம்பை மந்திர மொழியாலும், கீழ்மக்களை விலங்காலும் மக்கள் வயப்படுத்துவர்; ஆனால், சான்றோரை இன்சொற்களால் வயப்படுத்தவேண்டும். (வி-ரை.) மா வென்னும் அடைமொழி, சாதியை யுணர்த்திற்று. ‘கொந்தி' யென்றது, இங்குத் துன்புறுத்துதலை யுணர்த்தும்; 'கொல்லச் சுரப்பதாங் கீழ்' (ஈயாமை 9) என்னும் நாலடியாரை நினைவு கூர்க. இரும்பு: கருவியாகுபெயர். கயம்-கயவர்; கீழ்மக்கள். ‘நய' மென்றது, நினைவினிமை, சொல்லினிமை, செயலினிமையாகிய எல்லா இனிமைகளையு மென்க. பிணித்துவிடல் : வியங்கோள்; அல் : விகுதி. (12)
|