இலா - பெருந்தன்மை அமையாத, மாந்தரின் - ஆண் மக்களினும், நிறை நின்ற - கற்பில் நின்று அடக்கமுடைய, பெண் நன்று - பெண் மக்கள் நல்லர்; பண்அழிந்து-பதங்கெட்டு, ஆர்தலின் - உண்டலினும், பசித்தல் நன்று - பசியுடன் வருந்துதல் நன்று; பசைந்தாரின் - தம்மை விரும்பினாரினின்றும், தீர்தலின் - நீங்கி உயிர் வாழ்தலை விட; தீப்புகுதல் நன்று - எரியில்வீழ்ந்து உயிர் விடுதல் நல்லது. (க-து.) பறை, இசையமையா யாழினும் மேல்; கற்பமைந்த பெண்டிர், வினைத்திறன் அறியா ஆடவரினும் மேல்; பசித்தல், பண்டங்களைப் பதங்கெட உண்ணலினும் மேல்; தீப்புகுதல், விரும்பினாரைநீங்கி வாழ்தலினும் மேல் என்க. (வி-ரை.) எனவே, ‘யாழ் இசையமைதல் வேண்டும்' என்பது முதலாக இந்நான்கிற்கும் உடம்பாட்டிற் பொருளுரைத்துக் கொள்க. பண் இசைவான ஒலியமைப்பு. நிறை : தொழிற்பெயர். நினைவையுஞ் சொல்லையுஞ் செயலையும் ஒருவழி நிறுத்தல் என்பது பொருள். நிறை நின்ற : ஏழன் தொகை. பெண் நன்று என்புழி, நன்றென்பதை உயர்திணையாகக் கொள்க. நன்று நான்குங் குறிப்பு வினைமுற்று. பீடு - ஆள் வினைத்திறத்தின் மேலும், மாந்தர் - ஆடவர்மேலுங் குறிப்பால் நின்றன.ஆள்வினைத்திறத்திற் பெண்மக்கள் ஆடவரினும் ஆற்றல் குறைந்தவராகலின், அத்திறமமையா ஆடவரினும் பெண்டிர் நல்லரென்றார். பண் அழிவு - இங்குப் பண்டங்களின் பதனழிவை யுணர்த்திற்று. ‘அழிந்த ஆர்தலின்' என்றுரைப்பினுமாம்.பசைதல் - நெஞ்சு நெகிழ்ந்து அன்பு கொள்ளல்; ‘பசைதல் பரியாதா மேல்' (துறவு. 10) என்னும் நாலடியாரிலும் இஃது இப் பொருட்டாயது காண்க. ‘இன்' என்னும் ஐந்தனுருபுகள் எல்லைப் பொருளன. (15) 16. வளப்பாத்தியுள்வளரும் வண்மை கிளைக்குழாம் இன்சொற் குழியுள் இனிதெழூஉம்வன்சொல் கரவெழூஉங் கண்ணில் குழியுள் இரவெழூஉம் இன்மைக் குழியுள் விரைந்து. (இ-ள்.)வண்மை - ‘ஈகை' யென்னும் பயிர், வளப்பாத்தியுள் வளரும் - செல்வமென்னும் பாத்தியுள் விளையும்;
|