பக்கம் எண் :

20

கிளைக்குழாம் - உறவினர் கூட்டம், இன்சொல் குழியுள் - இன்சொலென்னும் பாத்தியுள், எழூஉம் - செழுமையாய் வளரும்; வன்சொல் கரவு - வன்சொல்லோடு கூடிய வஞ்சனை யென்னும் பயிர், கண் இல் குழியுள் - கண்ணோட்டமின்மை யென்னும் பாத்தியுள், எழூஉம் - வளரா நிற்கும்; இரவு ‘இரத்த' லென்னும் பயிர், இன்மைக் குழியுள் - ‘வறுமை' யாகிய பாத்தியுள், விரைந்து எழூஉம் - உடனே வளரும்.

(க-து.) ஈகை செல்வத்தா லுண்டாகும்; உறவினர்க்கு மகிழ்ச்சி இன்சொல்லா லுண்டாகும்; வன்சொல்லும் வஞ்சனையுள் கண்ணோடாமையா லுண்டாகும்; இரத்தல் வறுமையாலுண்டாகும்.

(வி-ரை.) பாத்தியென்றுங் குழியென்றுங் கூறினமையெல்லாம் உருவகம். வளம் - செல்வத்தை யுணர்த்துதல், ‘வையை சூழ்ந்த வளம்கெழு வைப்பு' (76) என்னும் புறநானூற்றுரையிற் காண்க. கிளை : உவமையாகுபெயர், கண் : காரணவாகுபெயர். அளபெடைகள் மூன்றும் இன்னிசை நிறைப்பன. இரவை விரைந்தெழூஉமென்றார், உணவு இன்றிச் சின்னேரந்தானும் வறியார் தம்மைக் காத்துக்கோடல் ஏலாமையின்.

(16)

 17. இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு
செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது
வேண்டின் வெகுளி விடல்.

(இ-ள்.) இன்னாமை வேண்டின் - இழிவை ஒருவன் விரும்பினால், இரவு எழுக - இரத்தலை மேற்கொள்க; இந்நிலத்து - இவ்வுலகத்தில், மன்னுதல் வேண்டின் - எஞ்ஞான்றும் நிலைபெறுதலை விரும்பினால், இசை நடுக - புகழ் நிறுத்துக, தன்னொடு செல்வது வேண்டின் - தன்னுடன் துணையாகச் செல்வதொன்றை விரும்பினால், அறம் செய்க -அறங்களைச் செய்க, வெல்வது வேண்டின் - பிறரை வெல்லல் வேண்டினால், வெகுளி விடல் - சினத்தை விடுக.

(க-து.) இழிவை விரும்பினால் இரக்க; அழியாமை வேண்டினால் புகழ் புரிக; உறுதுணையை வேண்டினால் அறஞ்செய்க; வெல்லல் விரும்பினால் வெகுளியை விடுக.