பக்கம் எண் :

21

(வி-ரை.) இன்னாமை - துன்பம். இங்கு இழிவு என்னுந் துன்பத்தை யுணர்த்திற்று. புகழ் செய்தாரே உலகில் இறவாது நிற்பர் என்பதனை, ‘மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாமாய்ந்தனர்' என்னும் புறநானூற்றா லறிக.‘நடுக' வென்றது, நிறுத்துக வென்றற்கு. செல்வது : தொழிலாகு பெயர், வெல்வது : தொழிற்பெயர். விடல்: வியங்கோள் வினை, ‘அல்' விகுதி.

(17)

 18. கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்குந் - தோமில்
தவக்குட்டந் தன்னுடையான் நீந்தும் அவைக்குட்டம்
கற்றான் கடந்து விடும்.

(இ-ள்.) கலவர் - மரக்கல முடையார், கடல்குட்டம் - கடலின் ஆழமான நீரை, போழ்வர் - பிளந்து செல்வர்; பாய்மா உடையான் - விரைந்த செலவைப் பொருந்திய படைக் குதிரையை யுடையான், படைக்குட்டம் - பகைவரது படையென்னும் ஆழ் கடலின் கரையை, உடைக்கிற்கும் - பொருது உடைத்து விடுவான்; தன் உடையான் - தன் மனத்தைத் தன்வயப்படுத்தினவன், தோம் இல் - குற்றமில்லாத, தவக்குட்டம் - தவமென்னுங் கடலை, நீந்தும் - நீந்திக் கரையேறுவான்; கற்றான் - தெளியக் கற்றவன், அவைக்குட்டம் - கற்றறிவுடையோர் நிரம்பிய அவைக்கடலை, கடந்து விடும் - தாண்டிவிடுவான்.

(க-து.) மாலுமிகள் நீர்க்கடலையும், மறவர் படைக்கடலையும், தற்காப்புடையான் தவக்கடலையும், கற்றான் அவைக்கடலையும், கடத்தல் எளிது.

(வி-ரை.) குட்டமென்னும் பண்பு கடலுக்கு வந்தமையின் ஆகுபெயர்.தன்னுடையான் - தன்னைத் தன் வயத்திலுடையானென்பது.நினைவுஞ்சொல்லுஞ் செயலும் நல்லவை விழையுந் தன்வழி நிற்குமாறு அடக்கும் ஆள்வினையுடையானென்று கொள்க. ‘போழ்வர்' முதலாயின உருவக வினைகள். உடைக்கிற்கும், கடந்துவிடுமென்பவற்றில் கில், ஆற்றற் பொருண்மை இடைநிலையெனவும், விடு, துணிவுப் பொருண்மை விகுதியெனவுங் கொள்க. அவைக்குட்டங் கடத்தலாவது, ஐயந்திரிபுகளில்லாக் கல்வியறிவுடன் நின்றுசெவிக்கினிமையும்