பயனும் உண்டாகுமாறு சுருங்கச்சொல்லி விளங்கவைத்துத்தெளிவுதேற்றி அவையினரை மகிழ்வித்த லென்க. (18) 19. பொய்த்தல் இறுவாயநட்புக்கள் மெய்த்தாக மூத்தல் இறுவாய்த் திளைநலந் தூக்கில் மிகுதி இறுவாய செல்வங்கள் தத்தம் தகுதி இறுவாய்த் துயிர். (இ-ள்.)தூக்கில் - ஆராய்ந்து பார்த்தால், நட்புகள் - நேசங்கள், பொய்த்தல் இறுவாய - பொய்யொழுக்கமாகிய இறுதியை யுடையன; இளைநலம் - இளமையின் அழகு, மெய்த்தாக - கண்ணுக்கு நேராக, மூத்தல் இறுவாய்த்து - மூப்பாகிய இறுதியையுடையது; செல்வங்கள், செல்வாக்குகள், மிகுதி இறுவாய - மிகையான செயல்களை இறுதியாக உடையன; உயிர் - மக்கள் உயிர், தத்தம் தகுதி இறுவாய்த்து -தத்தமது வாழ்நாளெல்லையை யிறுதியாக உடையது. (க-து.) நண்பர் தமக்குள் பொய்யொழுக்கம் நேர்ந்ததாயின், அவர் நட்புக் கெடும்; மூப்புத் தோன்றியதும் இளமை நலங் கெடும்; மீறிய செயல்களைத் தொடங்கியதுஞ் செல்வங் கெடும்; வாழ்நாள் எல்லை கண்டதும் உயிர் சாம். (வி-ரை.) நட்புக்கொள்ளும் இடம் பலவாதல்பற்றிப் பன்மையாகக் கூறப்பட்டது. இளமை : ஈறுகெட்டுப் பகுதிப் பொருள் விகுதி ஐகாரஞ்சேர்ந்து இளையென நின்றது. மிகுதி - மிகையான செயல்களையும், தகுதி - அளவாய வாழ்நாளையுங் குறிப்பாலுணர்த்தின. ‘மிகுதிக்கண், மேற்சென் றிடித்தற் பொருட்டு' (திருக்குறள், நட்பு, 4) என்பதனுரையில் பரிமேலழகர் 'பழியும் பாவமுந் தருஞ் செய்கை வேண்டப்படுவதன்மையின் அதனை மிகுதியென்றும்.........கூறினார்' என்று கூறும் உரை நினைவுகூர்தற்குரியது. (19) 20. மனைக்காக்கம் மாண்ட மகளிர் ஒருவன் வினைக்காக்கஞ் செவ்விய னாதல் - சினச்செவ்வேல் நாட்டாக்கம் நல்லனிவ் வேந்தென்றல் கேட்டாக்கம் கேளிர் ஒரீஇ விடல்.
|