பக்கம் எண் :

23

(இ-ள்.)மாண்ட மகளிர் - நல்லியல்பு நற்செயல்களில் மாட்சிமைப்பட்ட பெண்மக்களிருந்தால், மனைக்கு ஆக்கம் - மனை வாழ்க்கைக்கு உயர்வைத் தரும்; ஒருவன் - வீரனொருவன், சினச் செவ்வேல் - சினக்குறிப்புடைய சிவந்த படையினது பயிற்சிக் கண், செவ்வியனாதல் - தேர்ச்சியுடையனாயிருத்தல், வினைக்குஆக்கம் - போர்வினை முதலான ஆள் வினைகட்கு உயர்வாம்; இவ்வேந்து - இவ்வரசன், நல்லன் என்றல் - நல்லவனென்று குடிமக்களாற் பாராட்டப்படுதல், நாடு ஆக்கம் - நாட்டுக்கு உயர்வாம்; கேளிர் - சுற்றத்தாரை, ஒரீஇ விடல் - நீக்கி விடுதல், கேடு ஆக்கம் - கேட்டுக்குப் பெருக்கந் தரும்.

(க-து.) நன்மகளிர் மனைவாழ்க்கையையும், படைப்பயிற்சியுடையான் போர்வினை வெற்றியையும், செங்கோலரசன் நாட்டினையும் உயர்வாக்குவார், உறவினரை யொதுக்குதல் கேட்டினைப் பெருக்கும்.

(வி-ரை.) ‘சினவேல்' உடையான் பண்பு உடைமைமேலேற்றப்பட்டது. வேலுக்குச் செம்மையானது, பகைவ ருடம்பிற் புகுந்து குருதிக்கறை படிதலா லாகுஞ் செந்நிறம். என்றல்: செயப்பாட்டு வினைப்பெயர். கேடு : முதனீண்ட முதனிலைத் தொழிற்பெயர். நாட்டாக்கம். கேட்டாக்கம் : நான்கன்றொகை. நாட்டாக்காமாவது, குடிகள், செல்வம் கல்வி முதலியவற்றில் மேலோங்கி இன்பவாழ்வில் வைகுதல். ஒரீஇ யென்னும் அளபெடை செய்யுளோசை நிறைத்துப் பிறவினைக்கண் வந்தது. ‘சினச்செவ்வேல்' என்பதனை வேந்தனுக்கு அடையாக்குவாருமுளர்.

(20)

 21. பெற்றான் அதிர்ப்பிற் பிணையன்னாள் தானதிர்க்கும்
கற்றான் அதிர்ப்பின் பொருளதிர்க்கும் - 1பற்றிய
மண்அதிர்ப்பின்மன்னவன்கோலதிர்க்கும் பண்அதிர்ப்பின்
பாடல் அதிர்ந்து விடும்.

(இ-ள்.)பெற்றான் - கணவன், அதிர்ப்பின் - ஒழுக்கத்திற் கலங்குவானாயின், பிணை அன்னாள் - பெண்மான் போலும் மருண்ட பார்வையையுடைய அவன் மனைவியும், அதிர்க்கும் - தன் கடமையிற் கலங்குவாள்;கற்றான்


(பாடம்) 1 பாரிய.