அதிர்ப்பின் - புலவன் அறிவு கலங்கினால், பொருள் அதிர்க்கும் - அவன் கற்ற கருத்துக்களும் நிலை கலங்கும் : பற்றிய - தான் கைப்பற்றிய, மண் - உலகத்திலுள்ள குடிமக்கள், அதிர்ப்பின் - நிலைகலங்குவாரானால், மன்னவன் - அரசனது, கோல் அதிர்க்கும் - ஆட்சியுங் கலங்கும்;பண் அதிர்ப்பின் - யாழின் நரம்புக்கட்டுகள் அதிர்ந்துவிட்டால், பாடல் அதிர்ந்துவிடும் - அதிற் பிறக்கும் பாட்டுகளும் அதிர்ந்து போம். (க-து.) கணவன் கலங்கினால் மனைவி கலங்குவள்;கற்றான் கலங்கிற் கருத்துக்கள் கலங்கும்;குடி நடுங்கினாற் கோன் நடுங்குவன்;பண்ணதிர்ந்தாற் பாடலதிர்ந்துவிடும். (வி-ரை.) பெற்றான் - கொண்டவன், (கணவன்), ‘பெற்றாற் பிழையாத பெண்டிரு' மென்பது பரிபாடல். பிணை : தொழிலுவமம், தான் : அசை. ‘பொருளதிர்க்கு' மென்றது, நற்கருத்துக்கள் அவன்மாட்டுப் பிறவாமையும் தெளிவுபெறாமையு மென்க. பண் - இசையுமாம்; அற்றாயின், இசை கெட்டாற் செய்யுளுங் கெடுமென்றுரைக்க. மண் : இடவாகுபெயர். (21) 22. மனைக்குப்பாழ் வாள்நுத லின்மைதான் செல்லுந் திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை இருந்த அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ் கற்றறி வில்லா உடம்பு. (இ-ள்.)மனைக்குப் பாழ் - மனைக்குப் பாழாவது, வாள் நுதல் இன்மை - மனையாளை யில்லாமை; தான் செல்லும் - தான் போகும், திசைக்குப் பாழ் - ஊர்ப்புறங்கட்குப் பாழாவது, நட்டோரை இன்மை - அவ்விடங்களில் நண்பர்களில்லாமை;இருந்த அவைக்குப் பாழ் - பலரும் கூடியிருந்த அவைக்குப் பாழாவது, மூத்தோரை இன்மை - கல்வி கேள்வி முதலியவற்றாற் சிறந்த சான்றோரை இல்லாமை; தனக்குப் பாழ் - பிறவியெடுத்த தனக்குப் பாழாவது, கற்றறிவு இல்லா உடம்பு - கல்வியறிவு பெறாத வெறும் புலாலுடம்புஉள்ளமையாம். (க-து.) மனைவியில்லா மனை பாழ்; நண்பரில்லாப் பக்கம் பாழ்; ஆன்றோரில்லா அவை பாழ்; கற்றறிவில்லா வுடம்பு பாழ்.
|