பக்கம் எண் :

25

(வி-ரை.) வாள்நுதல் : இரண்டாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைக் காரணப்பெயர்;ஒளியைப் பொருந்திய நெற்றியையுடைய மனையாளென்பது பொருள். இன்மை : குறிப்புத் தொழிற்பெயர்.மூத்தோர் - மூ : பகுதி. உடம்பென்றது இங்குப் பிறவியை, கற்றறிவில்லாப் பிறப்புப் பாழென்பது கருத்து. ‘பேசாத நாளெல்லாம் பிறவா நாளே' (அப்பர், திருவாவடு, திருவேயென் செல்வமே, 10) என்பது, தேவாரம். திசை : ஆகுபெயர்.

(22)

 23. மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்
பொய்சிதைக்கும்பொன்போலும் மேனியைப் - பெய்த
கலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங்
கூடார்கண் கூடி விடின்.

(இ-ள்.)ஒற்றுமை இன்மை - தக்காரோடு ஒற்றுமையில்லாமை, ஒருவனை மொய் சிதைக்கும் - ஒருவனது வலிமையை ஒழிக்கும்;பொய் - பொய்ம்மையான ஒழுக்கம், பொன்போலும் மேனியை - பொன்னிறத்தைப் போன்ற அழகிய உடம்பை, சிதைக்கும் - வாடச்செய்யும்; பெய்தகலம் - நிரப்பி வைக்கப்பட்ட பாண்டம், பாலின் சுவையை - பாலின் இனிய சுவையை, சிதைக்கும் - கெடுக்கும்;கூடார்கண் - கூடத் தகாதாரிடத்தில், கூடிவிடின் - நட்புக்கொண்டு கூடிவிட்டால், குலம் சிதைக்கும் -அச்செய்கை தன் குலத்தை யழிக்கும்.

(க-து.) ஒற்றுமையின்மை வலியையும், பொய்ம்மை உடம்பையும், பால் பெய்த பொருந்தாப் பாண்டம் பாலின் இன்சுவையையும், தீநட்பு குலத்தையுங் கெடுத்துவிடும்.

(வி-ரை.) ஒற்றுமை - ஒன்றாந்தன்மை; அஃதாவது வேற்றுமை காணாமல் அளவளாவுந் தன்மை. மொய் - வலிமை; செல்வாக்கு முதலிய வலிமைகளும் இதன்கண் அடங்கும். பொன் போலு மேனி - மிகுதியும் வெண்மை கலவாத தளிர் நிறமான மேனி. ‘பொய்த்தபின் தன் னெஞ்சே தன்னைச் சுடும்' என்பவாதலால், பொய்ம்மையினார் பின்பு துன்பந் தோன்றி உடம்பு நிறங்கெட்டு மெலிதலின்.சிதைக்குமெனப்பட்டது. பெய்த : செயப்பாட்டு வினைப்பொருளது.கலம் - குறிப்பினாற்பொருந்தாக் கலமென்றுரைத்துக் கொள்க.

(23)