24. புகழ் செய்யும் பொய்யா விளக்கம்1 - இகந்தொருவர்ப் பேணாது செய்வது பேதைமை - காணாக் குருடனாச் செய்வது மம்மர் - இருள்தீர்ந்த கண்ணராச் செய்வது கற்பு. (இ-ள்.)பொய்யா விளக்கம் - பொய்யாமையாகிய ஒளி, புகழ் செய்யும் - எங்கும் புகழை உண்டாக்கும், பேதைமை - அறியாமை, இகந்து - முறை கடந்து, ஒருவர்ப் பேணாது - ஒருவரையும் மதியாமல், செய்வது - தீயவை செய்வதாம்; மம்மர் - கற்றறிவில்லா மயக்கம், காணா - வழிகாணாத, குருடனாச் செய்வது - குருடனாகச் செய்வதாம்; கற்பு - கல்வியறிவு, இருள் தீர்ந்த - குருடுநீங்கிய, கண்ணராச் செய்வது -கண்ணொளி யுடையராகச் செய்வதாம். (க-து.) பொய்யாமை புகழையும், அறியாமை தீயவை செய்தலையும், கல்லாமை அறியாமையையும்,கல்வியானது அறிவையும் உண்டாக்கும். (வி-ரை.) ‘பொய்யா விளக்கம்' பொய் கூறாமையாகிய விளக்கம்; இனி நினையாமையும் செய்யாமையும் அடக்கிக் கொள்க. பொய்யா விளக்க மென்பது பெயரெச்சவீறு தொக்கது ‘விளக்கம்' என்றார், அறியாமை யிருளை விலக்கி அறிவு விளக்கந்தரலின், ‘பொய்யாத விளக்கே விளக்' கென்றார் திருவள்ளுவனாரும்; (வாய்மை, 9), ‘பொய்யாமை யன்ன புகழில்லை, என்றார் பிறரும். ஒருவரென்பதற்கு முற்றும்மை விரித்துக் கொள்க. இகத்தல் - கடத்தல். கற்பு, காரணவாகு பெயர்.பேணாமை, ஈண்டு மதியாமை மேனின்றது; பேணுதல் - போற்றுதல். செய்வது : தொழிலாகு பெயர். இருளென்றது இங்குக் குருட்டுத் தன்மையை. மம்மர், கல்லாமையால் வரும் மயக்கத்தை யுணர்த்தலின், அறியாமையென்று கொள்க. (24) 25. மலைப்பினும் வாரணந் தாங்கும் அலைப்பினும் அன்னேயென் றோடுங் குழவி சிலைப்பினும் நட்டார் நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார் உடனுறையுங் காலமும் இல்.
(பாடம்)1 இகழ்ந்தொருவன் பேணாமை.
|