பக்கம் எண் :

27

(இ-ள்.) மலைப்பினும் - பாகன் தன்னை ஒறுத்தாலும்,வாரணம் தாங்கும் - யானை அவனைச் சுமந்து நிற்கும்; அலைப்பினும் - தன்னை அடித்து வருத்தினாலும், குழவி - குழந்தை, அன்னே என்று ஓடும் - அம்மா என்று அழுது கொண்டே அவளருகில் ஓடும்; சிலைப்பினும் - தவறு கண்டு சினந்துரைத்தாலும், நாட்டார் - நண்பர், நடுங்கும் வினை செய்யார் - நடுங்கும்படி தீயவை செய்யமாட்டார்;ஒட்டார் - பகைவர்கள், உடன் உறையும் காலமும் - தம்முள் ஒன்று கூடி நீங்காமல் வாழுங் காலமும், இல் - ஒருபோதும்இல்லை.

(க-து.) யானையையுங் குழந்தையையும் நண்பரையும் முறையே பாகனுந் தாயும் நண்பரும் வருத்தினாலும் ஒருவரையொருவர் தழுவியே நிற்பர்;ஆனால் பகைவரோ எக்காலத்தினும் ஒன்றாகப் பொருந்துதலில்லை.

(வி-ரை.) அலைத்தலை அடித்தலென் றுரைப்பினு மமையும். அன்னே : விளி. குழவி : பண்படியாய்ப் பிறந்த பெயர்.குழவு - இளமை; இளமையானதென்பது பொருள். குழவி தாய் நாடுமியல்பு என்பது ‘தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட்டன்னா யென்னுங் குழவி' (397) என்னுங் குறுந்தொகையினும் வெளிப்படும். சிலைத்தல் - ஒலித்தல்; சினக் குறிப்புடன் உரத்துப் பேசுதலை யுணர்த்திற்று, ‘நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண், மேற்சென்றிடித்தற் பொருட்'டாதலின் (திருக்குறள். நட்பு. 4) இச்சீற்றம் நண்பராற் பாராட்டப் படற்குரியதேயாம்; ஆதலாற்றான் ‘நடுங்கும் வினைசெய்யா' ரென்றார்; என்றது, ஒறாரென்றபடி. ஒட்டார் : எதிர்மறை வினையாலணையும் பெயர்; நெஞ்சொட்டாரென்பது. முதன் மூன்று உம்மைகளும் ‘உயர்வு சிறப்'பென்றும் பின்னது எச்சமென்றுங் கொள்க. உடனுறைதல் -பிரியாமல் வாழ்தல்.

(25)

 26. 1நகைநலம் நட்டார்கண் நந்துஞ் சிறந்த
அவைநலம் அன்பின் விளங்கும் விசைமாண்ட
தேர்நலம் பாகனாற் பாடெய்தும் ஊர்நலம்
உள்ளானால் உள்ளப்படும்.


(பாடம்)1 நசை நலம்.