(க-து.) பிறவுயிர்களைக் கொன்று உண்பதற்காக வளர்த்தலுங் குற்றம்; அங்ஙனங் கொல்லாமல் அவற்றின் ஊனை விலைக்கு வாங்கி உண்ணலுங் குற்றம்; சொல்லத்தகாதவற்றைச் சொல்லலுங் குற்றம்;கொல்லலுங் குற்றமேயாம். (வி-ரை.) அலைத்தல் - ஈண்டுக் கொலைமேனின்றது - பான் : வினையெச்சவிகுதி. பால் - வகை; சொலற்பாலவல்லாத - தீயனவுந் தகுதியற்றனவுமான சொற்கூறுகள். பால, அல்லாத : குறிப்பு வினையாலணையும் பெயர்கள். கொலைக்கு நிகரான இச்செயல்களும் அடங்குதலின், முதன்மூன்றும்மைகளும் எண்ணுப் பொருளன. இறுதியிலுள்ளது அவ்வெண்ணுப் பொருளோடு இறந்ததுதழீஇய எச்சப்பொருளுமாம். இதனால் புலாலுண்ணல், தகாதன கூறல், கொலைபுரிதல் முதலியன விலக்கப்பட்டன. (28) 29. கோல்நோக்கி வாழுங் குடியெல்லாந் தாய்முலைப் பால்நோக்கி வாழுங் குழவிகள் - வானத் துளிநோக்கி வாழும் உலகம் உலகின் விளிநோக்கி இன்புறூஉங் கூற்று. (இ-ள்.) குடி எல்லாம் - குடிமக்க ளெல்லோரும் கோல் நோக்கி -அரசனது ஆட்சியை நோக்கி, வாழும் - உயிர் வாழ்வார்; குழவிகள் - குழந்தைகளெல்லாரும், தாய் முலைப்பால் நோக்கி - தாயின் முலைப்பாலை நோக்கி, வாழும் உயிர் பிழைக்கும்; உலகம் - உலகத்துயிர்கள், வானத் துளி நோக்கி - வானத்தினின்றும் விழும் மழைத்துளியை நோக்கி, வாழும் - உயிர் வாழும்;கூற்று - நமன், உலகின் விளி நோக்கி - உயிர்களின் சாவை நோக்கி, இன்புறூஉம் -மகிழ்வான். (க-து.) குடிகள் அரசனது ஆட்சியால் உயிர் வாழ்வர்; குழந்தைகள் தாயினது முலைப்பாலால் உயிர்வாழும்; உயிர்கள் மழைத்துளியால் வாழும்; கூற்றுவன் உயிரிகளின் சாக்காட்டைஎதிர்நோக்கியிருப்பன். (வி-ரை.) கோல் - ஆட்சிக்கு வந்தது; அடைமொழி புணராமையின், அது செங்கோலரசையே குறிப்பதாயிற்று : இயல்பென்ற வளவில் அது நல்லியல்பையே குறித்தல்போல வென்க. வாழுங்குடி என்பதனாலும் அப் பொருள் காணலாம்.வானத்துளி - அ : சாரியை. ‘குடி' ‘உலகம்' முதலியன அஃறிணைச் சொல்லால் வந்தமையின், அவை தமக்கேற்றஅஃறிணை
|