பக்கம் எண் :

32

 31. குழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம் - அழித்துச்
செறிவழி நிற்பது காமந் தனக்கொன்று
உறுவுழி நிற்பது அறிவு.

(இ-ள்.) நீர் குழித்துழி நிற்பது - தண்ணீர் குழிக்கப்பட்ட இடத்தில் நிற்குமியல்புடையது; பல்லோர் - சான்றோர் பலரும், தன்னைப் பழித்துழி - தன்னைப் பழித்தவிடத்தில், பாவம் - தீவினையென்பது, நிற்பது - நிற்குமியல்புடையது; அழித்து - தவநெறியைக் கெடுத்து, செறிவுழி - தீய நெறியில் வயப்பட்ட விடத்து, காமம் - காமவியல்பு; நிற்பது நிற்பதாகும்; தனக்கு - அறிஞனொருவனுக்கு, ஒன்று உறுவுழி - ஓரிடர் உண்டான காலத்தில், அறிவு அவனது கல்வியறிவு, நிற்பது -துணையாய் நிற்குமியல்பினது.

(க-து.) பள்ளமுள்ளவிடத்தில் நீர் நிற்கும்; பலரும் பழிக்குந் தீயோரிடத்திற் பாவம் நிற்கும்; தவவொழுக்க மில்லான் பாற் காமம் நிற்கும்; இடர்வந்தபோழ்து கற்ற அறிவு துணை நிற்கும்.

(வி-ரை.) குழித்துழி - பள்ளம்; குழித்த உழியென்க. பழித்துழி - தீயோர். ‘அழித்து'‘செறிவுழி'என்பன குறிப்பாற் றவக்கேட்டையும் மலச்செறிவையும் உணர்த்தின.முதன்மூன்றடிகளில் வந்த ‘உழி' யென்னுமிடைச்சொல் இடப்பொருளையும், ஈற்றடியில் வந்தது காலத்தையுங் குறித்தன. ‘செறிவுழி' யென்பதில் வகரமெய் உடம்படுமெய்யன்று; ஏனையவற்றைப் போன்றதொரு சந்தியெழுத்து. இறைவன் றிருவருளியல்புகளிற் பழகாதார்க்கு மலத்தினியல்புகளே அடிக்கடி துன்புறுத்தாநிற்கு மாதலின், ‘அழித்துச் செறிவுழி நிற்பது காம'மெனப்பட்டது.

(31)

 32. திருவின் திறலுடைய தில்லை - ஒருவற்குக்
கற்றலின் வாய்த்த பிறவில்லை - எற்றுள்ளும்
இன்மையின் இன்னாத தில்லை1யில் லென்னாத
வன்மையின் வன்பாட்ட தில்.

(இ-ள்.) ஒருவற்கு - ஒருவனுக்கு, திருவினை - செல்வத்தைப்போல்,திறல் உடையது - வலிமையுடையது,