வல் என்ற - வன்மையான, நெஞ்சத்தவர் - நெஞ்சத்தையுடையவர், கல் அன்னர் -கல்லுக்கு ஒப்பாவார். (க-து.) வருவதறியாத பெண்டிர் நோய்க்கு ஒப்பாவர்; அன்புடைய மக்கள் அணிகலனுக்கு நிகராவர்; புல்லறிவையுடைய ஆடவர்கள் புல்லுக்கு நேராவர்;வன்னெஞ்சமுடையவர் கல்லுக்கு இணையாவர். (வி-ரை.) ‘பின்னோக்கா' வென்றது, கணவனது வரவுக்குமேல் முதலிற் செலவு செய்து பின்வரும் வறுமை கருதாமையே. ‘பயி' ரென்றதைப் புல்லாற் பிணிக்கப்படும் பயிரென்று கொள்க. புல் - களை.பிணித்தல் - வளர்ச்சியைக் கட்டுப்படுத்தல் ஆடவர் தமது புல்லறிவினால் தம்மைச் சூழ்ந்த சுற்றங்களையுங் கெடுத்தலின், இங்ஙனம் கூறினார். அன்னர் : குறிப்புவினைமுற்று. (34) 35. அந்தணரின் நல்ல பிறப்பில்லை என்செயினும் தாயின் சிறந்த தமரில்லை யாதும் வளமையோ டொக்கும் வனப்பில்லை எண்ணின் இளமையோ டொப்பதூஉம் இல். (இ-ள்.) அந்தணரின் - அந்தண்மையுடையார் பிறவியைப் போல, நல்ல பிறப்பு இல்லை - உயர்ந்த பிறவி வேறில்லை; என்செயினும் - தனக்கு என்ன தீமையைச் செய்தாலும், தாயின் - தாயைப்போல, சிறந்த தமர் இல்லை - மேலான உறவினர் எவருமிலர்; வளமையோடு - செல்வ வாழ்க்கையோடு, ஒக்கும் வனப்பு - ஒப்பான அழகு, யாதும் இல்லை - மற்றெதுவுமில்லை; எண்ணின் - ஆராய்ந்து பார்த்தால், இளமையோடு ஒப்பதும் - இளமைப் பருவத்தோடு ஒப்பாவதும், இல் -பிறிதொன்றில்லை. (க-து.) அந்தணர் பிறப்பே உயர்பிறப்பு ; தாயே சிறந்த தமர்; செல்வமே அழகு ;இளமையே இன்பம். (வி-ரை.) ‘அந்தணர்' இனிய அருளெண்ணமுடையார்; அவ் வியல்புடையராய்ப் பிறக்கும் பிறவியே உயர் பிறவி யென்க. எனவே இது காரணப்பெயர்; மற்றிதனைக் காரண விடுகுறியெனக் கூறிப் பிறப்பை வகுப்புமே லேற்றி யுரைப்பாரு முளர்.தாயே மக்கள் பால் அணுக்கமும் எஞ்ஞான்றும் இனியஉள்ளெண்
|