நீர் என்பது பாற்சோறுமாம். ‘வாய் பூசுப'; இன்னோரன்னவற்றை ‘இடக்கரடக்க' ரென்ப. அரிய அரியவற்றான் எய்தப்படு முண்மையை நிகழ்ச்சியிற் கண்டு தெளிக. அரிய, பெரிய, பண்படியாகப் பிறந்த பலவின்பாற் படர்க்கைப் பெயர்கள்.பெரிய பேறுகள் பெரியோருதவியினால் அடையப்படும் என்றும் உரைத்துக் கொள்க. (36) 37. மறக்களி மன்னர்முன் தோன்றுஞ் சிறந்த அறக்களி இல்லாதார்க் கீயுமுன் தோன்றும் வியக்களி நல்கூர்ந்தார் மேற்றாங் கயக்களி ஊரில் பிளிற்றி விடும். (இ-ள்.) மறக்களி - வீரக் களிப்பு, மன்னர்முன் - அரசர்கட்கு முன்னால், தோன்றும் - வீரர்கட்கு உண்டாகும்; சிறந்த அறக்களி - மிக்க ஈகைக் களிப்பு, இல்லாதார்க்கு - வறியவர்கட்கு, ஈயும் முன் - ஒன்று கொடுக்கு மிடத்து, தோன்றும் - கொடுப்பார்க்கு உண்டாகும்; வியக்களி - யாதானும் ஒன்றைப் பெற்று வியத்தல் செய்யுங் களிப்பு, நல்கூர்ந்தார் மேற்றாம் - வறிஞர்கள் பாலுண்டாகும், கயக்களி - கீழ்மையியல் பாலுண்டாகும் களிப்பு, ஊரில் - இருக்கும் ஊரில், பிளிற்றி விடும் - பலரும்அறிய ஆரவாரித்தலாலுண்டாகும். (க-து.) அரசனுக்கு முன்னாற் பொரும்போழ்து வீரர்கட்கு வீரக்களிப் புண்டாகும்; வறியார்க்கு ஒன்றீவதே செல்வர்கட்கு உண்மையான ஈகைக் களிப்பாம்; ஒன்றைப் பெற்று வியக்கும் களிப்பு ஏழைகட்குண்டு; கீழ்மகனது கீழ்மையாலான களிப்பு ஊரெல்லாந் தெரிவித்து ஆரவாரஞ் செய்தலே யாகும். (வி-ரை.) களி : முதனிலைத் தொழிற்பெயர்; அறம். உயர்வினால் ஈகைமேனின்றது. ஈயுமுன், முன் : ஏழாவதன் இடப்பொருளது. விய : முதனிலைத் தொழிற்பெயராக வந்தது. நல்கூர்ந்தார் மேற்று; மேல் ; ஏழனுருபு. கயவு - இங்குக் கீழ்மை. பிளிற்றிவிடும் - இரைச்சலிட்டுவிடும்; கீழ்மகன் தனது புன்செயலைப் பெரியதாய்க் கருதி ஊரெங்கும் சொல்லிச்சொல்லி மகிழ்தலே, ‘கீழ்மைப் களிக்'பெனப்பட்டது. (37) 38. மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள் நெய்யால் தளிர்க்கும் நிமிர்சுடர் - 1பெய்யல்
(பாடம்) 1 பெய்ய.
|